×

“திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு எந்தவித எதிர்ப்பு அலையும் இல்லை”- அமைச்சர் ரகுபதி

 

திமுக ஆட்சியின் மீது எந்தவிதமான எதிர்ப்பு அலைகளும் கிடையாது, எதிர்ப்பு இல்லாத எந்த அரசும் நிச்சயமாக வெற்றி பெறும். அதுதான் வரலாறு என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 101 ஊராட்சிகளில் விடியல் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் ஐம்பதாவது நாள் விழாவில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விடியல் விருந்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “கட்ட அவுட்டுகள் வைக்க கூடாது என்பது உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் வரும்பொழுது கொடிகள் மட்டுமே கட்டுவோமே தவிர கட்டவுட்டுகள் வைக்கும் பழக்கம் கிடையாது. கட்டவுட்டுகள் வைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கட்சியின் உத்தரவு. அதனால் நாங்கள் கட்டவுட்கள் வைப்பது கிடையாது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பதாகைகள் வைக்கும் பழக்கமே உண்டு. ‌ அது திமுகவின் கட்டளை உத்தரவு, கட்டவுட்டுகள் வைப்பதால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது, சாலையில் செல்லும் போது பொதுமக்களுக்கு ‌ விபத்து ஏற்பட்டு விடக்கூடாது, கட்டவுட்டுகள் ஒழுங்காக கட்டாமல் தலையில் விழுந்து அடிபட்டு விடக்கூடாது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு அதிமுகவினர் அனுமதி பெறாமல் கட்டவுட்டுகள் வைத்துள்ளனர். அதை அகற்ற போனால் அரசியல் என்று கூறுவார்கள். அனுமதி பெற்று வைக்காததற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அதற்குண்டான அபராதத்தை விதிக்கும், இந்த ஆட்சியின் மீது எந்தவிதமான எதிர்ப்பு அலைகளும் கிடையாது. எதிர்ப்பு இல்லாத எந்த அரசும் நிச்சயமாக வெற்றி பெறும், அதுதான் வரலாறு. எனவே நாங்கள் மக்களுக்கு பாதகமான எந்த ஒரு திட்டத்தையும் தரவில்லை, மக்களுக்கு சாதகமான திட்டங்களை தான் தந்திருக்கின்றோம். மக்களுக்கு தேவையான மக்களுக்கு அன்றாட செலவுகளுக்கு பயன்படக்கூடிய வகையில் மகளிர் உரிமை தொகை விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்து இருக்கின்றோம். பொதுமக்கள் மனதில் எங்களுக்கு எதிரான எதிர்ப்பு அலை கிடையாது, எதிர்ப்பு அலை இல்லாத அரசு வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.