×

தாக்குதலுக்கு தூண்டிவிட்டவர் என்பதால் ஈபிஎஸ் மீது வழக்கு - அமைச்சர் ரகுபதி

 

மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகர் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தூண்டிவிட்ட நபர் என்ற அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூரில் உள்ள அரசு தமிழ்நாடு வாணிப நுகர் பொருள் வட்ட கிடங்கில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகர் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தூண்டிவிட்ட நபர் என்ற அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை. இது பொய் வழக்கா? இல்லையா? என்பது நீதிமன்றத்தில் தெரியவரும். பொய் வழக்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது. மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப கூடிய முழு உரிமை இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்படும், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தான் வேளாண்மைக்கு என்று நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது மிகப்பெரிய சாதனை. ஐந்து லட்சம் மெட்ரிக் 10 அளவு நெல் தானிய உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு சிவில் சப்ளை குடோனுக்கு வந்திருக்கிறது. 

இதுவரை இல்லாத அளவிற்கு வரலாற்றுச் சாதனையாக மிகப்பெரிய கொள்முதல் அளவை தமிழக அரசு நெல் உற்பத்தியில் எட்டு விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. விவசாயிகள் நெல் மூட்டைகளை வெளியில் விற்பனை செய்தால் 800 ரூபாய்  அல்லது 900 ரூபாய் மட்டுமே கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் 2120 மூட்டைக்கு விவசாயிகளுக்கு வழங்குவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்” என்றார்.