×

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தை... கதறி துடித்த அமைச்சர் ஆர்.காந்தி!

 

கடந்த சில வாரங்களாகவே சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழையால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. அவ்வாறு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மசூதி தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 

பேரணாம்பட்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதையடுத்து மழையால் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அப்போது உயிரிழந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்து அமைச்சர் ஆர்.காந்தி கதறி அழுதார். அமைச்சர் அழுவதைக் கண்டு அங்கிருந்தவர்களும் கண்ணீர் வடித்தனர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், குடும்பத்தினருக்கு தேவையான உதவியைச் செய்ய கடமைப்பட்டுள்ளேன் என உறுதியளித்துள்ளார். மேலும் பேரணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புக் குழு சென்றுள்ளது.