அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்..!
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 20 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
மேலும், விருப்ப மனுக்களை பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணமாக, பொதுத் தொகுதிகளுக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.15 ஆயிரமும் செலுத்த வேண்டும் என்றும், கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் களம் அனல் பறக்கும் சூழலில், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று நான்காவது நாளாக விருப்ப மனு பெறுவது களைகட்டியுள்ளது. அந்த வகையில், இன்றைய தினம் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அண்ணா அறிவாலயத்தில் சமர்பித்தார். அதே போல, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் விருப்பமனுவை அளித்தனர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “30 ஆண்டுகளாக அயல்நாடுகளில் உலகளாவிய கல்வி நிறுவனங்களில் பயின்று, கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்த பின், எனது முன்னோர்கள் காட்டிய வழியினை பின்பற்றி, பொது வாழ்விற்குள் நுழைந்த போது, 10 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு பின்னர் மீண்டும் எனது சொந்த தொழில்முறை துறைக்குத் திரும்புவேன் என்று தெரிவித்திருந்தேன்.
ஆனால், என் தொகுதி மக்கள் முதல் தேர்தலில் அளித்த ஆதரவைவிட அதிகமான வாக்குகளால் இரண்டாம் முறை வெற்றி பெற செய்தது மட்டுமன்றி, என் பாசத்திற்குரிய தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது அமைச்சரவையில் பணியாற்றும் அரிய வாய்ப்பையும் வழங்கினார். அதன் மூலம், என் வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மக்கள் நலனிலும் மாநில முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளை நிறைவேற்றும் நற்பேறு கிடைத்தது.
எனது முன்னோர்கள் தங்கள் பொது வாழ்விற்கு எந்த வரையறையும் இன்றி தமது வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதை நினைவில் கொண்டு, அவர்கள் பாதையை பின்தொடர முடிவு செய்துள்ளேன். அவ்வகையில், மீண்டும் ஒருமுறை கட்சி தலைவரிடம், எனது பொது வாழ்க்கையை தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாய்ப்பு கோரி, விருப்ப மனுவை சமர்ப்பித்தேன். கட்சித் தலைவர் வாய்ப்பளித்தால் எனது தொகுதி மக்களிடம், பத்தாண்டுகளாக எனக்கு அளித்து வந்த மகத்தான ஆதரவை, இம்முறையும் தொடர்ந்து வழங்கிட கோருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.