×

ஜனவரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு... பரீட்சைக்காக ஸ்டடி லீவ்!

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டன. இருப்பினும் முதல் அலை ஓய்ந்த பிறகு மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. சுழற்சி முறையில் கல்லூரிகள் ஒருசில நாட்கள் இயங்கின. ஆனால் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை வந்ததால், மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்பட்டன. 

2ஆம் அலை ஜூலையில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் செப்.1ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு 50% சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அக்டோபரில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கிய பின்னர் அவர்களுக்கும் இதே நடைமுறை தொடர்ந்தது. இச்சூழலில் நவம்பரில் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, முழு நேரடி வகுப்புகளைச் செயல்படுத்த உயர் கல்வி துறை அறிவித்தது. அதேபோல தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதற்கு மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாக மாணவர்களின் கோரிக்கைக்கேற்ப செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்நிலையில் 3ஆம் அலை தொடங்கியிருப்பதால் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று சென்னை எம்ஐடி, அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்காக விடுமுறை (Study Holiday) அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.