×

கள்ளச்சாராய உயிரிழப்பு என்பது ஒரு விபத்து - அமைச்சர் ஐ.பெரியசாமி

 

தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

தேனி அருகே  முத்துதேவன்பட்டியில் உள்ள  தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு தொழிலாளர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், வேளாண்மை  உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் 784 பயனாளிகளுக்கு ரூபாய் 8 கோடி 47லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், நகை கடன் தள்ளுபடி, கல்லூரி மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டம் என பல்வேறு திட்டங்களில் ஏராளமானோர் பயனடைந்து வருவதாக கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, “கள்ளச்சாராய உயிரிழப்பு என்பது ஒரு விபத்து. ஆனால் சிலர் அரசியலுக்காக குறை பேசுகிறார்கள். குற்றவாளிகளுக்கும் குடும்பம் உள்ளது. அதற்காகவே கள்ளச்சாராயம் வழக்கில் கைதானவருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. ஏழை, பணக்காரன் என கணக்கு பார்த்து நிவாரணம் கொடுக்கிறது இல்லை. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கள்ளச்சாராய வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கள்ளச்சாராய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்” என்றார்.