தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - நிர்மல்குமார்
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
அமித்ஷா தலைமையில் இன்று நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், ‘மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்’ என முதல்வர் விஜய் பேசினார்.கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்று “மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” எனவும் கூறினார். முன்னதாக ஆகஸ்ட் 9 2026 அன்று நடந்த அனைத்து எம்.பி. க்கள் கூட்டத்திலும் ஆகஸ்ட் 12 2026 அன்று சட்டப்பேரவையிலும், ’தொகுதி மறுசீரமைப்பே கூடாது. தற்போது உள்ள 543 என்ற எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. 543 தொகுதிகளில் மாற்றம் செய்ய கூடாது என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். யாரும் திரித்து பேச வேண்டாம். தமிழ்நாட்டில் 39 எம்.பிக்கள் தொடர வேண்டும் என்பதும் த.வெ.க நிலைப்பாடு. தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களது கோரிக்கைகள் பிரச்சனைகளை கூறின. காவிரி விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மாநாட்டில் அதுபற்றி பேசவில்லை” என்றார்.