×

"ஊழலுக்கு இடமில்லை, லஞ்சம் கேட்டால் நேரடியாகப் புகார் அளிக்கலாம்" - நிர்மல் குமார்

 

ஓட்டுநர் உரிமம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கப்படும் முறையைத் தங்களின் அரசு முழுமையாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

பட்டமளிப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் மாணவிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மேல் படிக்க முடியாமல் தவித்தனர். தற்போது அங்குப் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதுபோன்று அடிப்படை வசதிகள் இல்லாமல் இன்னும் பல கிராமங்கள் உள்ளன. மக்களின் அடிப்படையாக செய்ய வேண்டிய சாதாரண விஷயங்களே நிறைய உள்ளதால், அதைக் கவனத்தில் கொண்டு மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறோம்.  ஓட்டுநர் உரிமம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கப்படும் முறையைத் தங்களின் அரசு முழுமையாக நிறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்துச் சிறந்த நிர்வாகம் வழங்கி வருகிறது. எங்கேயும் லஞ்சம் கேட்டால் உடனடியாக அமைச்சரிடமோ அல்லது முதல்வரிடமோ தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 15 ஆண்டுகளாக பி.எட் மற்றும் பொதுவான அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இதனை மாற்ற வேண்டியது அவசியமாகும். பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் அனைத்து இளைஞர்களுக்கும் முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவது இந்த அரசின் தலையாய கடமையாகும். மாநிலத்தின் வருவாயை பெருக்குவதன் மூலமாக, அனைத்து துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணிகளைத் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. கல்வி மட்டுமே நமக்கு இருக்கும் நிலையான சொத்தும், நமக்கான உண்மையான அடையாளமாகும். அதிலும் பெண்களுக்குக் கல்வி கற்பது மிகவும் அவசியமானது. பெண்கள் மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் முறையான மற்றும் சிறப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. உங்களது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், நமது அண்ணன் அரசு இந்த இலக்கை நிச்சயம் நிறைவேற்றித் தரும். ஆவினுக்குத் தேவையான பாலைக்கூட நாம் வேறு மாநிலங்களில் இருந்துதான் இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளிலும் தமிழகம் இன்னும் போதிய வளர்ச்சி காணாமல் பின்தங்கியுள்ளது. இந்தச் சிக்கல்களைக் கண்டு அஞ்சாமல், ஒவ்வொன்றாகச் சரி செய்து நமது மாநிலத்தை முன்னேற்றும் முயற்சியில் அரசு தீவிரமாகச் செயல்படும்” என்றார்.