ஸ்டாலின், இபிஎஸ் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கின்றனர் - அமைச்சர் நிர்மல் குமார்
முதல்வர் குறித்து தரக்குறைவாக பேசியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “அவதூறு வழக்கு என்பது வேறு.. ஒருவரை தனிப்பட்ட வகையில் ஒருமையில், கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். அவர் பேசிய விஷயங்களை வீட்டில் குடும்பத்தினரோடு போட்டு கேட்டுப் பாருங்கள். அவர் பேசியது சரியா என்று கேட்டுப்பாருங்கள். யாரைப் பற்றியும் அப்படிப் பேசும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவர் முதல்வரைப் பற்றி பேசியிருக்கிறார். அதற்கு சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்கத்தான் செய்வோம்.
வைகை ஆறு விஷயத்தில் ஆளுநர் மாளிகை நேரடியாக இயங்கும் என்று ஆளுநர் அர்லேக்கர் கூறியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆளுநரே நேரில் சென்று வைகை ஆற்றை தூர்வாருவாரா? ஆளுநருக்கு என ஒரு அதிகாரம் உள்ளது, அதை மட்டும் அவர் கடைபிடித்தால் போதும். மக்களால் தேர்வான அரசு இயந்திரத்தில் தலையிடும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் மாளிகைக்குள் உள்ள வேலையை அவர் பார்த்தால் போதும். மீண்டும் தேர்தலை சந்திக்க தயார். மீண்டும் தேர்தல் வந்தாலும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வருவோம். குதிரை பேரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியும் முயல்கின்றனர். 30 நாட்களில் ஆட்சி கவிழும் என எப்படி ஸ்டாலின் கூறினார்? எம்.எல்.ஏக்களை வாங்கும் தைரியத்தில்தான் அப்படி கூறியுள்ளார். ஸ்டாலின், இபிஎஸ் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கின்றனர்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.