×

"தவறு செய்யவில்லையெனில் ராஜேந்திர பாலாஜி ஏன் ஓடி ஒளிய வேண்டும்?"

 

ஆவின் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜேந்திர பாலாஜி கைதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. தவறு செய்யவில்லை எனில் ராஜேந்திரபாலாஜி ஏன் ஓடி ஒளிய வேண்டும்? தவறு செய்தவர் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஏமாற்றப்பட்ட அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை தவறு கண்டறியப்பட்ட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 700 பேரின் பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஆவின் நிறுவனம் நலிவடைந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது, அதிமுக ஆட்சியில் முப்பத்தி ஆறு லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்ட பாலின் அளவு தற்போது 41 லட்சம் லிட்டராக உயர்ந்து இருக்கிறது. அதேபோல் சிங்கப்பூர், மலேசியா, மேற்கிந்திய நாடுகளுக்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததை அதிமுக ஆட்சியில் முடக்கி வைத்து இருந்தது, தற்போது ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிர் அளித்து ஏற்றுமதியை தொடங்க இருக்கிறோம்” எனக் கூறினார்.