×

மூதாட்டி வீட்டில் சாம்பார் சாதம் சாப்பிட்ட அமைச்சர் என்.ஆனந்த்..!

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். பின்னர், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதையடுத்து, மதுராந்தகம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மதுராந்தகம் தனித் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நாதக, கம்யூனிஸ்ட் என ஐந்து முனைப்போட்டி நிலவி வருகிறது.

இதையொட்டி, அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பது, வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்திப்பது, வாகனப் பிரசாரம் மேற்கொள்வது என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுராந்தகம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, மதுராந்தகம் தொகுதியின் தேவைகளை கருத்தில் கொண்டு, தேவையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் மரகதம் குமரவேலை ஆதரித்து வீடு வீடாகச் சென்ற அமைச்சர் என்.ஆனந்த், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது அப்பகுதியில் உள்ள ஒரு மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற என்.ஆனந்த், அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர், வீட்டில் அமர்ந்த கலந்துரையாடியதுடன், மூதாட்டியின் வீட்டிலிருந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டார். தொடர்ந்து மூதாட்டியின் குடும்ப நிலை மற்றும் அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தேர்தல் பிரசாரத்துக்கு மத்தியில் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் அமர்ந்து உணவருந்தியதுடன், அவர்களின் குறைகளையும் நேரடியாக கேட்டறிந்த என்.ஆனந்தின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.