டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை- அமைச்சர் முத்துசாமி
டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கான விற்பனை அதிகரித்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி பதிலளித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கான விற்பனை அதிகரித்து வருகிறது. அரசு இயந்திரம் இதற்காக முடுக்கி விடப்பட்டதாக நயினார் நாகேந்திரன் கூறி இருப்பது தவறானது. இதை திட்டவட்டமாக மறுக்கிறேன். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது தான் அரசின் முடிவு. ஒரே நேரத்தில் கடைகளை மூட முடியாது. படிப்படியாக கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். டாஸ்மாக் விற்பனைக்காக எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை அவ்வாறு கூறுவது தவறு. இது தானாக ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அதிகரித்து வருகிறது படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முடிவு. ஏற்கனவே 500 கடைகளை மூடி உள்ளோம் மதுவிற்கு பழக்கமானவர்களை அதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும், ஒரே நேரத்தில் அனைத்து கடைகளையும் மூடுவது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். படிப்படியாக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக இருக்கிறது. விற்பனையை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே நாளில் மது விற்பனை உயர்ந்து இருக்கிறது என்பதை விட மற்ற நாட்களில் சாதாரணமாக தான் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மது பாட்டில்களை சாலையில் வீசி செல்வதையும், வயல்வெளிகளில் வீசுவதையும் தவிர்ப்பதற்காகத்தான் நீதிமன்ற உத்தரவின் படி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் கொண்டு வரப்பட்டது. படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டது. மது பாட்டில்களை திருப்பி ஒப்படைக்க அறிவுறுத்தினாலும் பலரும் தருவதில்லை இதை தவறாக சித்தரிக்கின்றனர் பிரச்சனையை தீர்க்க அனைவரும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். மது பாட்டிலை திருப்பிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் பில் போடும்போது கூடுதலாக பத்து ரூபாய் பில் போட்டு வசூலிக்கப்படுகிறது. அரசின் துறைக்கு கணக்கில் தான் இந்த தொகை பெறப்படுகிறது. மது பாட்டிலை திருப்பி ஒப்படைக்கும் பொழுது அந்த பணம் திரும்ப வழங்கப்படுகிறது. இது ஒரு டெபாசிட் தொகையாக தான் கருத வேண்டும் இதை தவறான வழியில் யாரும் பயன்படுத்த முடியாது.. இதை தவறான பிரச்சாரமாக கொண்டு செல்கின்றனர். மது பாட்டில்கள் வீசி எறிவதால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதை நீதிமன்றத்தின் உத்தரவின் படி தான் செயல்படுத்தப்படுகிறோம். பர்கூர் மலை கிராமத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட மலை கிராமங்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.