கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்ப்பு- அமைச்சர் முத்துசாமி
கோவை மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
கோவையில் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கோவையில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கோயம்புத்தூரில் மழை நிலவரம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் எல்லா இடங்களையும் சென்று பார்க்க வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், கண்காணிப்பு அதிகாரி என அரசு துறையைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. நேற்று அனைத்து இடங்களையும் பார்வையிட்டோம். மிக அருமையான முன்னேற்பாடுகள் செய்து இருந்தனர். அதன் காரணமாகத் தான் மேட்டுப்பாளையம், வால்பாறை போன்ற பகுதிகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. சில இடங்களில் வீடுகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருக்கு அது குறித்த தகவல் அனுப்பப்பட்டு, அதற்கு நிதி வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் 23 லட்சம் இழப்பீடு வழங்க முன்மொழிவு அனுப்பி உள்ளார். அந்த பணம் வந்ததும் நஷ்ட ஈடு கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கோவையில் 8 வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் சிறிய காயங்கள் ஏற்பட்டு, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களையும் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். இன்று மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். பல இடங்களில் கடந்த முறை பெய்த மழையை கணக்கில் வைத்து, சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல 90 நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக சாப்பாடு செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது ஒரே ஒரு நிவாரண மையத்தில் மட்டும் 100 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மற்ற இடங்களில் இவ்வளவு பிரச்சனை ஏற்படவில்லை, காரணம் முன் கூட்டியே செய்யப்பட்ட ஏற்பாடுகள் தான். நீர்வழித் தடங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இருக்கின்றன.
முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்றால், சாலையில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் சென்று விட்டது போன்ற புகார்கள் வந்து இருக்கும். கோவையில் அது போன்ற ஒரு புகாரில்லை. இதற்கெல்லாம் காரணம் முன்னேற்பாடுகள் தான். முன்னேற்பாடுகள் செய்து இருக்கிற காரணத்தால் தான் எந்த சாலையிலும் தண்ணீர் தேங்கவும் இல்லை, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகவில்லை. சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது என்றால், மழைக் காலம் வருவதால் அதை பேட்ச் செய்யாமல் இருப்பார்கள், மழைக் காலம் முடிந்ததும் அதை சரி செய்து விடுவார்கள். கோவையில் சாலைகள் எங்கு ? போட வேண்டுமோ ? அங்கெல்லாம் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பாதிப்புகள் இல்லை, ஆனால் மழையின் அளவு அதிகம். அங்கு நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கிறது” என்றார்.