×

தமிழ்நாட்டில் கள் விற்பனை சாத்தியமா? ஆய்வு செய்து முடிவு - அமைச்சர் முத்துசாமி

 

டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மொக்கயம்பாளையத்தில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தர்மபுரியில் மது அருந்துவதில் நிகழ்ந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் என்ன நடந்தது என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும். அண்ணாமலை டாஸ்மாக்  மதுபானம் இலக்கு நிர்ணயித்து விற்கப்படுவதாக தவறான தகவலை பரப்புகிறார். மது அருந்துபவர்கள் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. விற்பனையை உயர்த்த வேண்டும் என்பது நோக்கம் இல்லை.  விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு கிடையாது. 

மது பழக்கத்தில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கில் கவுன்சிலிங் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கள் விற்பனை என்பது ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று. ஆய்வு  செய்து தான் முடிவு எடுக்க முடியும். கள் அனுமதிப்பதா? வேண்டாமா? என பதில் கூற முடியாது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தால் ஊழியர்கள் மீது கைது  நடவடிக்கை  எடுக்கப்படும். அந்த ஊழியர்கள் உடனுக்குடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.. டாஸ்மாக்கில் 25 ஆயிரம் தொழிலாளர் உள்ளனர். ஓரிருவர் செய்யும் தவறை ஒட்டு மொத்தமாக பார்க்க கூடாது. கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 99% கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்பட்டுள்ளது” என்றார்.