×

கொரோனாவுக்கு பின் அதிகரிக்கும் மாரடைப்பு; ஆய்வு செய்ய அறிவுறுத்தல்- அமைச்சர் மா.சு

 

தமிழ்நாட்டில் இளம்வயதில் மாரடைப்பால் இளைஞர்கள் மரணம் அடைவது குறித்து இருதய வல்லுநர்களிடம் ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தி உள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  70-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை வேளச்சேரியில்  அப்போலோ சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் மாபெரும் மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம், h3n2 பாதிப்பு உள்ளதா என சோதனை செய்ய சிறப்பு முகாம்கள்  தினந்தோறும் நடைபெறுகிறது என்றும் H3n2 பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை, லேசான காய்ச்சல் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் வந்து ஓரிரு நாட்களில் குணமாவதால், பிரச்சனை ஏதும் இல்லை.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தூத்துக்குடி சிறுமி உயிரிழப்பு குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடருக்கு பிறகு உலகம் முழுவதும் குறைந்த வயதில் மாரடைப்பால் மரணம் அடைபவர்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருதய சிகிச்சை வல்லுனர்களிடம் இது குறித்து ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மேலும் வருகிற 17-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டம் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில் தலைமைச்செயலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.