×

அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்

 

சொத்து தகராறில் சகோதரரையும், அவரது மனைவியையும் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் நெஸ்தோர். இவரது மகன்கள் மரிய குளோத் (வயது 47) மரிய வில்சன் (வயது 44). இதில் மரிய வில்சன் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தமிழக நிதி அமைச்சராக உள்ளார். முன்னதாக மரிய வில்சனுக்கும், அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. கடந்த 8.8.2022-ந் தேதிஅன்று மரிய வில்சன், அவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர், புதுவை 'எழில் நகரில் உள்ள மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி கேர்லின் குளோத்தையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கேர்லின் குளோத் புதுவையில் உள்ள லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மரிய வில்சன், நெஸ்தோர் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து மரிய வில்சனுக்கு விலக்களித்த சென்னை உயர்நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் இன்று ஆஜராக  உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார். அப்போது நிதியமைச்சர் மரிய வில்சன் சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கு தொடர்பாக பேச்சுவார்த்தை மீண்டும் 21ஆம் தேதி ஒத்திவைத்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இருந்து புறப்பட்டார்.