×

அமுல் விவகாரம்- வியாபார நோக்கமா? அரசியல் பின்னணியா?: அமைச்சர் விளக்கம்

 

அமுல் நிறுவனம் பால் உற்பத்தி பகுதியை மீறக் கூடாது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோத தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது 45 லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருகிறது. அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆவின் போல கேரளா, கர்நாடாவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. தற்போது பால் உற்பத்தி பகுதி மீறல் வந்துவிட கூடாது என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. எனவே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம் . பால் உற்பத்தி பகுதியில் விதிமீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல்போல் அமுல் நிறுவன நடவடிக்கை தெரிகிறது.

எனவே தான் 2 விஷயங்களை கூறி முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு தமிழக அரசுடன் எதுவும் பேசவில்லை. அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை. பொதுவாக ஒரு மாநிலத்தில் செயல்படுகிற சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை” என்றார்.