×

தினசரி ஆவின் பால் கொள்முதலை 45 லிட்டரிலிருந்து 70 லட்சமாக உயர்த்த திட்டம்: மனோ தங்கராஜ்

 

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை எழுபது லட்சமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும். முதற்கட்டமாக பால்வளத்துறை நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். பால் வளத்திற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை 70 லட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் பால் பண்ணைகளில் பழைய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இயந்திரங்களை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பால் வளத்தை பெருக்குவதற்கு கால்நடைகளுக்கான தீவனப் பகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறைகளோடு இணைந்து அதற்கான முறையான திட்டத்தை வகுத்து முதல்வரை சந்தித்து வழங்க இருக்கிறோம். 

2 லட்சம் கறவை மாடுகள் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறோம், கூட தேனீ பூவில் இருந்து எப்படி பாதிப்பில்லாமல் தேனை எடுக்கிறதோ அதைப்போல் பொதுமக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதிக்கும் ஒன்றிய அரசு, இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கைகள் வரக்கூடாது. ஏற்கனவே பண மதிப்பிழப்பின் போது பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது. அரசு எப்போது ஒரு நிலைப்பாடு எடுத்தாலும் அது மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்” என்றார்