×

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா! நிரம்பும் படுக்கைகள்!!

 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவனைகள் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கி ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் சராசரியாக 5 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் 2வது அலையை போல அதிக பாதிப்பு ஒமிக்ரான் பரவல் மூலம் ஏற்படும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில், ஐ.சி.யூ படுக்கை, ஆக்சிஜன் படுக்கை போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகள், புறநகர் அரசு மருத்துவமனை, கோவிட் கேட் சென்டர்களில் 8,038 ஆக்சிஜன் படுக்கைகள், 3,850 சாதாரண படுக்கைகள், 1,928 ஐ.சி.யூ படுக்கைகள் என மொத்தம் 13 ஆயிரத்து 816 படுக்கைகள் சென்னையில் உள்ளன. இதில் தற்போது வரை 11 ஆயிரத்து 292 படுக்கைகள் காலியாக உள்ளன. மொத்தமாக உள்ள படுக்கைகளில் 7% மட்டுமே நிரம்பி இருக்கின்றன. அதனால் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி வீட்டிலோ அல்லது அரசு மருத்துவமனைகளுக்கோ சிகிச்சைகாக வரலாம். போதுமான படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. தனியார் மருத்துவமனையை பொறுத்தவரை, 741 ஐசியூ படுக்கைகள், 2164 ஆக்சிஜன் படுக்கைகள் என மொத்தம் 8,127 படுக்கைகள் கொரோனா சிகிச்சைச்காக உள்ளன. இதில் இன்று வரை 10.7 சதவிகித படுக்கைகள் நிரம்பி இருக்கின்றன” என தெரிவித்தார்.