×

9வது தடுப்பூசி முகாமில்  8,36,696 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்- அமைச்சர் மாசு

 

இன்று நடைபெற்ற 9வது மெகா தடுப்பூசி முகாமில்  8,36,696 பேர்  செலுத்திக்கொண்டதாகவும், அதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் தடுப்பூசி நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக டெங்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 50 ஆயிரம் இடங்களில் இன்று முகாம்கள் நடத்தப்பட்டது, கனமழையிலும் 23 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். அதற்கு பொதுமக்களுக்கு நன்றி. இன்று மட்டும் 8,36,696 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதில் முதல் தவணையாக 3,36,468 பேரும், இரண்டாம் தவணை 5,00,328 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 10 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். தமிழகத்தில் 1 கோடியே 23 லட்சத்தி 44 ஆயிரத்து 704 தடுப்பூசி கையிருப்பு உள்ளது. அதில் 91,98,007 கோவிஷீல்டு மருந்தும், 31,46,697 கோவேக்ஸின் மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. எனவே முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியவர்கள் விருப்பப்பட்டதை போட்டு பயன்பெறுங்கள்

தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 74% பேருக்கு போடப்பட்டுள்ளது, இரண்டாம் தவணை தடுப்பூசி இன்று காலை வரை 36% ஆக இருந்த நிலையில் இன்று ஒரேநாளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்  37% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை முதல்தவனை  4,29,68,122 நபர்கள் செலுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல இரண்டாம் தவணை  2,14,23,780 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 6,43,91,902 ஆக அதிகரித்துள்ளது. 

மழை காலத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக 30,836 இடங்களில் வாகனங்கள் மற்றும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டதில் 11,88,549 பேர் பயன் பெற்றுள்ளனர். இதுவரை  450 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களில், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 532 பேர்  டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செவிலியர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடவேண்டும் அதை தவிர்த்து கொரோனா தடுப்பூசி போட மாட்டோம் என போராடுவது தவறு. 74% சதவீத  அளவிற்கு வந்துவிட்டோம் இன்னும் சிறிது தூரம் தான் என்று கேட்டுக்கொண்டார். வீடுத்தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று செயல்பட வில்லை என்றும் மேலும் வரும் ஞாயிறு அன்றும் இத்திட்டம் செயல்படாது” என தெரிவித்தார்.