×

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், குரங்கு காய்ச்சல் பாதிப்பா?

 

தமிழகத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல், குரங்கு அம்மை போன்ற காய்ச்சல்கள் மற்றும் வைரஸ் பரவல் எதுவும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஒரு கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் ஜெகதேவி பாரூர் மேகல சின்னம்பள்ளி மற்றும் சந்தூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வெளி நோயாளிகள் கட்டிடங்கள் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் ஆகிவற்றை வழங்கினர்.

விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், “இந்த ஆண்டு தமிழகத்தில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்க ஒன்றிய அரசிடம் அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஆம்பள்ளியில் இந்த ஆண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மருத்துவமனை துவங்கவில்லை வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாக பன்றிக் காய்ச்சல், குரங்கு போன்ற நோய் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரள மாநில எல்லையோரமுள்ள 13 சோதனை சாவடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை” எனக் கூறினார்.