×

தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டது -  அமைச்சர் தகவல்!!

 

3வது அலையை பொறுத்தவரை தீவிர சிகிக்சை என்பது குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், " பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் முகாம் நடைபெறும். மிதமான தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்துதல் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை அளிக்கப்படும்.  சென்னையில் 20 ஆயிரம் பேர் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.  வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையம் வரலாம்" என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவர்கள் தினமும் போன் செய்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர்  தரப்பட்டுள்ளது,  தனிமைப்படுத்துதல் உள்ளவர்கள் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஒமிக்ரானும் கொரோனாவும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டது.  100 பேருக்கு கொரோனா உறுதியாகும் பட்சத்தில் 85 பேருக்கு ஒமிக்ரான் என்று தான் வருகிறது. அத்துடன் ஒமிக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர். கொரோனா 3 ஆம் அலையை பொருத்தவரை தீவிர சிகிச்சை என்பது குறைவாகவே இருக்கிறது.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களின் அருகிலேயே மருத்துவ சிகிச்சை முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது " என்றார்.