×

அபாய நாடுகளிலிருந்து வந்தவர்களின் தொற்று பாதிப்பு 4 ஆக உயர்வு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து மத்திய அரசு அறிவித்தால் தமிழக அரசு செயல்படுத்தும் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது உலக நாடுகளை ஒமிக்ரான்  வைரஸ் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.  கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு புதிய வகை ஒமிக்ரான்   வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க தீவிர நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா  இல்லை என்று முடிவு வந்தாலும் அவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.  பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசு அறிவித்தால் தமிழக அரசு செயல்படுத்தும்.  தொற்று  பாதித்த மூன்று பேருக்கும் டெல்டா வகை வைரஸ் ஆக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.  இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதன் மூலம் அபாய நாடுகளிலிருந்து வந்தவர்களின் தொற்று பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர் , "திருச்சி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டு உள்ளது . வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.  ஒமிக்ரான் கண்டறியப்பட்டால் உடனே சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.