×

"பொங்கலுக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்"- மா.சு.

 

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நுழைவு வாயில் மற்றும் கல்லூரி வளாகத்தில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் வளாகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “35 ஆண்டுகளுக்கு பிறகு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் புனரமைக்கும் பணிகள் முடிந்து இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 12 கோடி செலவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்த பணியாளர்களை போல தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது அரசின் பரிசீலனையில் உள்ளது என கூறினார். நியாமான கோரிக்கைகளை பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தற்காலிக செவிலியர்களை எம்ஆர்பி மூலம் பணியில் ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்டது. 2014ல் இருந்து தற்காலிக பணியாளர்களாக இருந்து வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றியதால் 14 ஆயிரம் பெற்ற ஊதியம் 18 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 3614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 8,322 செவிலியர்களின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து வருகிறார்கள். 1200 செவிலியர்கள் முதலமைச்சரால் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  169 பேருக்கு உடனடியாக நிரந்தர பணியாணை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 750 பேருக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி தரப்படும் எனவும் பொங்கலுக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் எனவும் 724 பேர் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கும் தொகுப்பூதிய பணியிடங்களை ஒதுக்கி தரப்படும்.

செவிலியர்கள் கல்லூரி துவங்க விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வரவேற்பு தெரிவித்துள்ளனர். 2014 - 2015 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்தது தவறு. படிபடியாக செவிலியர்களின் காலிபணியிடங்கள் நிறைவேற்றப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னால் அதனை செய்யும் அதிமுக ஆட்சி போல் அல்ல” என்றார்.