×

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை நிச்சயம் தேர்வு உண்டு- அமைச்சர் மா.சு.

 

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் நிச்சயம் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  நீட் தேர்வு எழுதிய மாணவ -மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் 24 மணி நேர சேவை மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதற்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் உங்களோடு மனநல சேவை "14416" தொடங்கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் இரண்டு மனநல மருத்துவர்கள் கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவ-மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை சேவை வழங்கும் செயல்முறையை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த 46,932 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஏழாம் தேதி அன்று நடைபெற்றது. 

இதில் 1.47 லட்சம் தமிழ்நாட்டு மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள். இவர்களின் விவரங்கள் முழுமையாக பெறப்பட்டு தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்கு 20 மனநல ஆலோசகர்களின் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டவிருக்கிறது. அதிக மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களை கண்டறிந்து மாவட்ட மனநல குழு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இடம் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இக்குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ்-2 தேர்ச்சி பெறாத 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மனநல ஆலோசனை இன்றுடன் நிறைவடைந்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர் நடவடிக்கையை தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளாக எடுத்து வருகிறார். 

நீட் தேர்வு விலக்கு பெறுவது தொடர்பாக மாநிலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவா, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு தமிழக சட்டபேரவையில் நிறைவேற்ற மசோதா நகலை அனுப்பி உள்ளார். கடந்த மார்ச் 27-ந் தேதி தமிழகத்துக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் குறிப்பாணை வந்தது. இதற்கு மே 10-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விக்கு, தமிழக சட்டத்துறை பதில் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆயுஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பதில்கள் அனுப்பப்பட்டுள்ளது. எனவே நீட் விலக்குக்கு அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜ்ல்லிக்கட்டு போன்று நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என தமிழக அரசு நம்புகிறது. நீட் விலக்கு நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த வாரம் வரை நீட் தேர்வு விலக்குக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை நிச்சயம் தேர்வு உண்டு. நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் நிச்சயம் தயாராக வேண்டும். ஒடிசா,ஆந்திரா,ஜார்கண்ட்,கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு எல்லோரும் ஒன்றிணைந்து  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். மருத்துவ படிப்பிற்கான பொது கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என்ற முடிவை மாற்றக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.