×

அரசு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் வர துவங்கி உள்ளனர்- அமைச்சர் மா.சு

 

மருத்துவம்‌ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா மற்றும் புதிய கட்டிடங்களை திறக்கும் விழா நடைபெற்றது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் வர துவங்கி உள்ளனர். செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை ராஜீவ்காந்தி ஆகிய மருத்துவமனைகளில் மக்கள் இரு மடங்காக வர துவங்கி உள்ளனர். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக வில்லை, அரசு மருத்துவமனைகளின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், ஏற்கனவே டெல்லியில் பார்த்து விட்டு வந்த ஆம் ஆத்மி மஹபுல்லா கிளினிக் என்று சொல்லக்கூடய மருத்துவமனைகள் போலவே தமிழகத்தில் கட்ட வேண்டும்‌ என முடிவெடுத்து 708- மருத்துவமனைகளை தமிழகம் முழுவதும் 21-மாநகராட்சியிலும், 63-நகராட்சியிலும் கட்ட வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சியில் தலா ஒரு மருத்துவமனைகளும், தாம்பரம் மாநகராட்சியில் 18-இடங்களில் மருத்துவமனைகளும் கட்டப்பட உள்ளது

நேற்றைக்கு ஐ.சி.எம்.ஆர். என்கிற அமைப்பு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளனர். இந்தியா முழுவதும் H3 42 என்னும் இன்ஃப்லுயன்சா வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரஸின் பாதிப்பு 3-முதல் 4-நாட்கள் வரை காய்ச்சல் வந்தவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உயிரிழப்பு இல்லை என்றாலும், உடல் வலி, தலை வலி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் வருகிறது. கொரோனா காலத்தில் நாம் என்னென்ன? நடைமுறைகளை பின்பற்றுகிறோமோ அதனை பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக வருகின்ற மார்ச் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் காலை 9-மணிக்கு தொடங்கி பிற்பகல் 2- மணி வரை 1000-இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். சென்னை மாநகராட்சியில் 200-வார்டுகளிலும், பிற பகுதிகளில் 800-இடங்களிலிலும் நடத்தப்பட உள்ளது” எனக் கூறினார்.