“வளர்த்த கட்சியே எங்களை கைவிட்டது; வாரி அணைத்தவர் விஜய்”- அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
முன்னாள் பேரவைத் தலைவர் தனபால், தனது மகனும் அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வனின் பதிலுரையை காண சட்டப்பேரவை மாடத்திற்கு வந்தார். அப்போது சபாநாயகர் திருக்குறளை சுட்டிக்காட்டி, தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.
பேரவையில் பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், “ஒருவர் வீட்டில் சமைத்த உணவை உண்ண மறுத்தவர்கள் மத்தியில் அந்த ஒருவரை தமிழ்நாட்டிற்கே கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஒருமுறை அல்ல தொடர்ந்து இரண்டு முறை சபாநாயகர் பொறுப்பு கொடுத்தார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என சொல்வார்கள். ஆனால் எங்கள் தலைவர் 128 அடி பாய்ந்துள்ளார். வளர்த்த கட்சியே என்னையும் என் தந்தையையும் கைவிட்ட நிலையில் வாரி அணைத்து கொண்டவர் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். அவருக்கு என் குடும்பத்தாரும், வருங்கால சந்ததியினரும் நன்றி விஸ்வாசத்தோடு இருப்போம். எங்களை ரீல்ஸ் போட்டு தான் ஆட்சியை பிடித்தோம் என்று சொன்னார்கள்..! ஆனால் அவர்கள் ஓட்டியதெல்லாம் பழைய ரீல்.. அதெல்லாம் அந்துபோய் தான் உட்கார்ந்திருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது ஒரு சமூகத்தின் முன்னேற்றம் மட்டும் அல்ல அது சமூக நீதியின் வெற்றி. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துவேன் என பலர் வாய் கிழிய பேசினாலும், அதை நிரூபித்து காட்டியவர் சமூக நீதி காத்த சரித்திர நாயகன் முதலமைச்சர் விஜய் தான். பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர், புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா இவர்கள் ஒருசேர ஒரு உருவமாக இருக்கும் உன்னதமான தலைவர் விஜய்” எனக் கூறினார்.