×

“நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சரா? மக்கள் கவனமா இருக்கணும்”- கே.என்.நேரு

 

நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என மக்கள் முன்பாக வருகின்றனர். பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி செயல் திட்டம் குறித்த கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி எம் எல் ஏ காடுவெட்டி  தியாகராஜன் தலைமை வகித்தார், முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், முசிறி நகர செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பேசுகையில், “முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி, குடும்பப் பெண்கள் வளர்ச்சிக்காக மகளிர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.1000  வழங்கப்பட்டு வருகிறது, மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 96000 மகளிர்கள் மனு அளித்திருந்தனர். இதில் 49000 மகளிருக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதுபோல ஒரு கோடியே 90 லட்சம் பேருக்கு மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டம் நடத்துவதற்கான காரணம் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் கடந்த சட்ட பேரவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக வாக்குகள் பெறுவதற்கான கூட்டம்தான். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 53 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளோம். இதே போல வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் கூடுதல் வாக்குகள் பெற வேண்டும், மேலும் நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆக போகிறேன் என நாட்டு மக்கள் முன்பாக கூறி கொண்டு வருகின்றனர், எனவே பொதுமக்கள் ஆகிய நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும் . தற்போது நடக்கின்ற ஆட்சி நாட்டு மக்களாகிய உங்களுக்கு செய்துள்ள நல்ல பல திட்டங்களை எண்ணி பார்த்து வருகின்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டும். அரசின் சாதனைகளை நல்ல பல திட்டங்களை பூத் கமிட்டி நிர்வாகிகள் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பு ஏற்க பாடுபட வேண்டும்” என பேசினார்.