“விஜய் சொல்ற இந்த ஒரு வாக்கியம் சாதாரண அறிவுரை அல்ல; அரசு தரும் உறுதியான பாதுகாப்பு”- கீர்த்தனா
ஒரு அரசின் உண்மையான வலிமை அதன் திட்டங்களில் மட்டும் இல்லை; அந்த அரசு மக்களிடம் ஏற்படுத்தும் நம்பிக்கையில்தான் இருக்கிறது என அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில், “ஒரு அரசின் உண்மையான வலிமை அதன் திட்டங்களில் மட்டும் இல்லை; அந்த அரசு மக்களிடம் ஏற்படுத்தும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. “யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்… நான் உங்கள் கூட இருக்கிறேன்.” எங்க அண்ணன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் சொல்ற இந்த ஒரு வாக்கியம் சாதாரண அறிவுரை அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திற்கும், ஒவ்வொரு இளைஞருக்கும் அரசு தரும் உறுதியான பாதுகாப்பு. பல ஆண்டுகளாக, லஞ்சம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே பலர் நினைத்தனர். ஆனால் இன்று, “லஞ்சம் கொடுக்க வேண்டாம்; சட்டம் உங்கள் பக்கம் இருக்கிறது, அரசு உங்கள் பக்கம் இருக்கிறது” என்று ஒரு முதலமைச்சர் நேரடியாக மக்களிடம் கூறுவது நல்லாட்சியின் மிக உயர்ந்த அடையாளமாகும்.
மக்களை அதிகாரிகளுக்கு முன் தலைகுனியச் சொல்லாமல், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து தலைநிமிர்ந்து நிற்கச் சொல்லும் ஆட்சியே மக்கள் ஆட்சி. நேர்மையை ஊக்குவித்து, ஊழலை எதிர்த்து, குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் இந்த அணுகுமுறையே தமிழ்நாட்டின் நிர்வாக கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கையே வளர்ச்சியின் அடித்தளம். மக்களுக்கு துணையாக நிற்கும் இந்த உறுதி, எதிர்கால தலைமுறைக்கும் இந்த அரசு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். நேர்மை வெல்லட்டும். ஊழல் தோற்கட்டும். மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறட்டும். வளர்ச்சியிலும், வெளிப்படைத்தன்மையிலும், நல்லாட்சியிலும் தமிழ்நாடு என்றும் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தொடரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.