☰
×

“தவெக பெண் வேட்பாளர் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் வேதனையளிக்கிறது”- அமைச்சர் கீர்த்தனா

 

ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே இத்தகைய கருத்துகளை முன்வைக்கும்போது, அக்கட்சியின் மற்ற தலைவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?  என அமைச்சர் கீர்த்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில், “தமிழக அரசியல் களத்தில் திமுகவின் பேச்சுகள் மீண்டும் ஒரு தாழ்ந்த நிலையை எட்டியுள்ளன. அவருடைய ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் கூட சந்திக்காமல் ரீல்ஸ் எடுப்பதில் மும்முரமாக இருந்த ஒருவரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இன்று, முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தாராபுரம் தொகுதியின் தவெக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் வேதனையளிக்கின்றன. ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த பொறுப்பை வகித்தவர், பெண்கள் குறித்து இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பது வருத்தத்திற்குரியது.

ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே இத்தகைய கருத்துகளை முன்வைக்கும்போது, அக்கட்சியின் மற்ற தலைவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், அவர்களின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடுவதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும் இத்தகைய பேச்சுகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒரு பெண்ணைப் பற்றியோ, ஒரு வேட்பாளரைப் பற்றியோ மட்டுமே பேசப்படும் பிரச்சினை அல்ல. ஒவ்வொரு பெண்ணுக்கும் உரித்தான மரியாதை, கண்ணியம் மற்றும் சுயமரியாதை குறித்த பிரச்சினையாகும். பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய பேச்சுகள் தொடருமானால், பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.

அக்டோபர் 6 அன்று, தாராபுரத்தின் பெண்கள் அனைவரும் தங்களின் சொந்த சத்தியபாமா அக்காவுக்குத் தோளோடு தோள் நின்று, ஒருமித்த குரலில் தங்களின் கருத்தை வெளிப்படுத்துவார்கள். ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதமான வாக்குரிமையின் மூலம், பெண்களை அவமதிக்கும் அரசியல் பேச்சுகளுக்கு எதிராகத் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள். பெண்களின் கண்ணியத்தைச் சீண்டிப் பார்க்கும் அரசியலுக்கு, பெண்களின் ஒற்றுமையும் ஜனநாயகக் குரலும் பதிலளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.