“முதலமைச்சரை அவதூறாகப் பேசியவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”- அமைச்சர் ஜெகதீஸ்வரி
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசியவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சரைப் பொது மேடையில் அவமரியாதையாகப் பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் எதிரான செயலாகும்.தமிழக முதலமைச்சரைப் பற்றி அவதூறாகவும், இழிவாகவும் பேசியவர்களின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்தகைய தரக்குறைவான பேச்சுகளில் ஈடுபட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து, தமிழக முதலமைச்சரிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சரைப் பற்றி பொது மேடையில் கவுன்சிலர் சுதா தீனதயாளன் இழிவாகப் பேசிய வேளையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்களும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்களும் மேடையில் சிரித்து ரசித்த செயல் பொறுப்பான பொது வாழ்வுக்கு ஏற்ற செயலல்ல. இத்தகைய அணுகுமுறை அரசியல் நாகரிகம் மற்றும் பொதுவாழ்வின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.தொடர்ந்து இத்தகைய அவதூறான பேச்சுகளில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து, தங்களது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவதூறுப் பேச்சுகள் அல்ல, கண்ணியமான அரசியலும் பொறுப்பான செயல்பாடுகளுமே அவசியம்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிநபர் அவமதிப்பும் தரக்குறைவான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களது பேச்சிலும் செயலிலும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.எனவே, மக்கள் போற்றும் தமிழக முதலமைச்சரை அவதூறாகவும் இழிவாகவும் பேசிய சுதா தீனதயாளன், அதனை கண்டிக்காமல் கண்டு ரசித்த கனிமொழி எம்.பி, மேயர் ப்ரியா உள்ளிட்ட வர்கள் தங்களது பேச்சுக்கும் செயலுக்கும் வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசியல் நாகரிகத்தையும் பொதுவெளியின் கண்ணியத்தையும் காப்பது அனைவரின் கடமையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.