×

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை”-  அமைச்சர் ஜெகதீஸ்வரி

 

அரசியல் அதிகாரம் என்பது பிறரை அச்சுறுத்துவதற்கோ, அவமதிப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமை அல்ல. அது மக்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட பொறுப்பு என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெகதீஸ்வரி தனது எக்ஸ் தளத்தில், “அரசியல் களத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது. ஆனால், அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு மற்றும் மிரட்டல் போன்றவற்றை முன்வைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் பண்பாடு அல்ல. குறிப்பாக, மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் பொறுப்பு வகித்த ஒருவர், பொது வாழ்க்கையின் மாண்பையும், அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தையும் மறந்து மாற்றுக் கருத்து கொண்டவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசியல் அதிகாரம் என்பது பிறரை அச்சுறுத்துவதற்கோ, அவமதிப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமை அல்ல. அது மக்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட பொறுப்பு.

எங்களை விமர்சிக்கலாம்; எங்கள் கொள்கைகளை கேள்வி கேட்கலாம். ஜனநாயகத்தில் அதற்கான முழு உரிமையும் அனைவருக்கும் உண்டு. ஆனால் தனிப்பட்ட அவதூறு, தரக்குறைவான வார்த்தைகள் மற்றும் மிரட்டல்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.நாங்கள் தரக்குறைவான அரசியல் மொழிக்கு தரக்குறைவான பதிலை அளிக்க விரும்பவில்லை. ஏனெனில், மாண்பும் நாகரிகமும் கொண்ட அரசியலே எங்கள் பாதை. அதே நேரத்தில், எங்களை மிரட்டியோ, அவதூறு செய்தோ எங்கள் அரசியல் பயணத்தை தடுக்க முடியும் என்று யாரும் நினைக்க வேண்டாம். மக்களின் நம்பிக்கையோடும், உண்மையின் அடிப்படையிலும் எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.விமர்சனம் இருக்கட்டும்; கருத்து மோதல் இருக்கட்டும்; ஆனால் அரசியலில் நாகரிகமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை. மக்களின் முன்னிலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதே உண்மையான அரசியல் பண்பு.தரக்குறைவான பேச்சுகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல், மக்கள் நலனுக்காக எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.