×

தளபிதியாரை வணங்கி, பேரவர் தலைவரா?- சட்டசபையில் தடுமாறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி!

 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியகோரிக்கையின் போது அமைச்சர் ஜெகதீஸ்வரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் திருமணச் செலவைக் குறைக்கும் வகையில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியாக பயணிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் யுடிஐடி அட்டையை பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அறிவிப்புகளை வாசித்தபோது அமைச்சர் ஜெகதீஸ்வரி பல தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பதில் தடுமாறியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ‘தளபதியாரை வணங்கி’ என்பதற்கு பதிலாக ‘தளபிதியாரை வணங்கி’ என்றும், ‘பேரவைத் தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பேரவர் தலைவர்’ என்றும் அவர் வாசித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், ‘வடிவமைக்கப்பட்ட’ என்பதற்கு பதிலாக ‘வடிக்கப்பட்ட’, ‘இல்லங்கள்’ என்பதற்கு பதிலாக ‘இலக்கங்கள்’, ‘அருமை கருதி’ என்பதற்கு பதிலாக ‘அரிமை கருதி’ என்றும், ‘உயரம் குறைந்த’ என்பதற்கு பதிலாக ‘உயரம் குறித்த’ என்றும் அவர் வாசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் உரையில் தொடர்ந்து உச்சரிப்பு தடுமாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு சில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க உதவியதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜெகதீஸ்வரியின் தமிழ் வாசிப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.