×

“கட்சியினரை கோவில்களில் ஆய்வு செய்ய சொல்லுங்கள்”- உதவியாளரிடம் கூறிய அமைச்சர் ரமேஷ்

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள பிரசாத கடைகளுக்கு சென்று பிரசாதங்களின் தரம் குறித்து கேட்டிருந்தார் அந்த பிரசாதங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது. இது குறித்து கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இது குறித்து அனைத்து கோவில்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ரமேஷ், தன்னுடைய உதவியாளரிடம் நம் கட்சியினரை அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று அங்குள்ள பிரசாத கடைகளில் ஆய்வு செய்ய சொல்லுங்கள் என கூறினார் அதை அதிரடியாக செய்ய வேண்டாம் பணிவுடன் மேற்கொள்ள வேண்டும் என கூடுதலாக தெரிவித்தார். கோவில்கள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மக்கள் பயன்படுத்தும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை ஒரு அமைச்சரே அவருக்கு கீழ் உள்ள கோயில்களில் தன்னுடைய கட்சியினரை சென்று ஆய்வு செய்ய கூறி உதவியாளர்களிடம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே த.வெ.கவை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகி ஒருவர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அதேபோல த.வெ.கவை சேர்ந்த சிலர் மாநகராட்சி அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒரு அமைச்சரே தன்னுடைய கட்சியினர் அனைத்து கோவில்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.