×

"திருவண்ணாமலையில் ஒரே நபர் 672 நகைக்கடன் வாங்கியுள்ளார்" - அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

 

நகைக்கடன் முறைகேடு குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை குறைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்தார்.  சட்டத்திருத்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி காலம் 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வான நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, "பல இடங்களில் போலி  நகைகளை வைத்து நகைக்கடன்கள் பெற்று மோசடி நடந்துள்ளது; முறைகேடு செய்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? திருவண்ணாமலையில் ஒரே நபர், ஒரே ஆதார் அட்டை, குடும்ப அட்டை வைத்து 672 நகைக்கடன் வாங்கியுள்ளார். கூட்டுறவு சங்களில் யார் முறைகேடு செய்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதிப்பட தெரிவித்தார்.  அத்துடன் சேலம் , நாமக்கல்லில் 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். பயிர் கடன் தள்ளுபடி ஆகுமா மீண்டும் நடப்பாண்டில் பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.