×

“ரூ.8,000 கூப்பன்... எதிரிகள் க்ளீன் போல்டு”- கீதா ஜீவன்

 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை போலவே ரூ 8000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது. இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல, உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல் போட்டால், 'இல்லத்தரசி' என்ற திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கும் வாக்குறுதிதான் முன்னிலையில் நிற்கும்!திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில், இல்லத்தரசிகள் வீட்டுக்குத் தேவையான வாஷிங் மிஷின், டிவி., கிரைண்டர், பிரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ முடியும். வீட்டு உபயோகப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்தான், 'இல்லத்தரசி' திட்டத்தின் ஹைலைட்! முந்தைய காலங்களில் அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்ற ஒரே மாதிரியான பொருளாக இல்லாமல், கூப்பனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் வாங்க முடியும். ’உரிமைத் தொகை’ என்ற சொல்லை அளித்த மு.க.ஸ்டாலின் அரசுதான், 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டத்தில் விரும்பிய பொருட்களை வாங்கும் ’உரிமை’யையும் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறது.

’எங்காவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போட்டிருக்கிறார்களா?’ என  வீட்டு உபயோகக் கடைகளைப் பார்வையிடும் மற்றவர்களிடம் கேட்கும் பெண்களின் மனதிற்குள் இருக்கும் ஏக்கத்தை எத்தனை பேர் அறிவார்கள்? வீட்டில் மக்கர் பண்ணிக் கொண்டிருக்கிற பழைய மின்சாதனப் பொருளை மாற்ற ஒரு வசதி வராதா? என ஏங்கும் எத்தனையோ லட்சம் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு பொருள் அவர்கள் வீட்டுக்குள் வந்தால், அது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு வரம் மட்டுமல்ல. வர்க்க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! அதனை உணர்ந்துதான் பழைய பொருட்களை மாற்றும் அம்சத்தையும் இந்தத் திட்டத்தில் சேர்த்தது திமுக. பழைய வீட்டு உபயோகப் பொருட்களைக் கடைகளில் கொடுத்துவிட்டு, கூப்பனைப் பயன்படுத்தி புதிய மாடல் பொருட்களை மாற்றிக் கொள்ளலாம். பழைய பொருட்களைக் கொடுத்துவிட்டுப் புதியவற்றை வாங்கிக் கொள்ளும் வசதியால், பழைய பொருட்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் உள்ளூர் வணிகமும் இன்னொரு பக்கம் புத்துயிர் பெறும். சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பயன் அளிப்பதால் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள், தங்கள் வீட்டுத் தேவைகளுக்காகச் செய்யும் செலவில் இருந்து நிம்மதி பெறுவார்கள். அவர்களின் பொருளாதாரச் சுமை குறையும்.  பெண்களின் வாங்கு திறனை (Purchasing power) அதிகரித்து சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நலத்திட்டங்களுக்கும் நிதி மேலாண்மைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணும்!

இது வெறுமனே 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம்’ மட்டுமல்ல. உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணியாகவும் (Smart Economic Multiplier) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ’உள்ளூர் வணிகம் - இல்லத்தரசிகளின் தேவை’ என இரு தரப்பையும் இணைக்கும் ஒரு பாலமாக அமையும். இந்தத் திட்டத்தில் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்கும் போது உள்ளூர் சிறு மற்றும் குறு வணிகர்களின் விற்பனை அதிகரிக்கும். கடந்த காலங்களில் மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை பெரிய காப்ரேட் நிறுவனங்களில் அரசு டெண்டர் விட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம்’ பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பதில் உள்ளூர் வணிகர்களின் விற்பனையை நேரடியாக அதிகரிக்கும். பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, நலிவடைந்த சிறு மின்சாதனக் கடைகளுக்குப் பெரிய அளவில் புத்துயிர் கிடைக்கும்! சுமார் 2 கோடி குடும்பங்கள் இந்த கூப்பன்களை பயன்படுத்தும் போது சிறு மற்றும் நடுத்தர மின்சாதனம் மற்றும் வீட்டு உபயோகக்  கடைகளில் விற்பனை பெருமளவில் அதிகரிக்கும். அதனால், உள்ளூர் வணிகர்கள் புதிய 'ஆஃபர்'களை வழங்குவார்கள். 2 கோடி குடும்பங்களும் இந்த கூப்பன்களை பயன்படுத்தும் போது சிறிய மற்றும் நடுத்தரக் கடைகளில் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். அதனால், சந்தையில் பணப்புழக்கம் உயர்ந்து, அது பொருளாதாரத்தை வேகப்படுத்தும்! மக்கள் புதிய மின்சாதனப் பொருட்களை வாங்கும் போது, எதிர்காலத்தில் அவற்றுக்கான பராமரிப்பு மற்றும் உதிரிப் பாகங்கள் தேவைப்படலாம். இது உள்ளூர் பழுதுபார்ப்போர் மற்றும் சிறு உதிரிப் பாக விற்பனையாளர்களின் வருமானத்தை நீண்ட கால அடிப்படையில் உயர்த்தும். இத்தனை சிறப்பம்சங்கள் இல்லத்தரசி திட்டத்தில் அமைந்திருப்பதால்தான் பத்திரிகைகளும் திட்டத்தைப் பாராட்டுகின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில், ’அரசு ஒரு குறிப்பிட்ட பொருளைத் திணிக்காமல், மக்களின் விருப்பத்திற்கு (Choice-based governance) ஏற்ப கூப்பனாக வழங்குவது ஒரு நவீன அணுகுமுறை எனக் குறிப்பிட்டிருக்கிறது. பெண்களின் வீட்டு வேலைப் பளுவைக் குறைக்கும் 'ஸ்மார்ட் எகனாமிக் மல்டிபிளையர்' (Smart Economic Multiplier) என்று வர்ணித்திருக்கிறது The Federal இணையதளம். தி இந்து நாளிதழ், ’இந்த திட்டம் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு கேம் சேஞ்சர்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆட்சியோ எதிர்க் கட்சியோ மக்களுக்கான அரசியலை நேர்த்தியாகச் செய்யும் இயக்கம் திமுக. ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கும். குறிப்பாகக் கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம்  ஆகியவற்றில் அதீதக் கவனம் செலுத்தும்.  சமூக நீதியின் தொடக்கமே ஆண் பெண் சமத்துவம்தான் என்பார் தந்தை பெரியார். அதனை உண்மையாக்கிக் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். உலகத்திலேயே முதல் முறையாக ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் சொத்துரிமை என்பதைச் சட்டமாக்கினார் கலைஞர். அவர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்ததுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள்! ‘வெளியுலகைப் பாருங்கள்’ என்று வண்ணத் தொலைக்காட்சியைத் தந்தார் கலைஞர்; அந்தப் பெண்கள் நேரடியாக வெளியுலகைக் காண விடியல் பயணத் திட்டம் வகுத்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள். பெரியார் காட்டிய பெண்ணுரிமைப் பாதையில் கலைஞரால் மட்டும்தான் நடக்க முடியுமா? அதற்கு தானும் சளைத்தவன் இல்லை என முன்னுக்கு வந்து நின்றார் மு.க.ஸ்டாலின் அவர்கள்! மேம்போக்காகப் பார்த்தால் வீட்டு உபயோகப் பொருள் வாங்க 8 ஆயிரம் ரூபாய் என்று மட்டும்தான் தெரியும். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இதன் பின்னணியில் இருக்கும் பெண்களின் சுய முன்னேற்றமும் அதிகரிக்கப் போகும் அவர்களின் தன்னம்பிக்கையும்  மிச்சப்படுத்தப் போகும் அவர்களது நேர விரயமும் புரியவரும். இன்றைக்குப் பெண்கள், சமையல் மற்றும் துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைக்குத்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரச் சுதந்திரம், சமூக மரியாதை ஆகியவற்றில் பெண்கள் எவ்வளவு முன்னேறுகிறார்களோ அதுவே அவர்களின் சுயமரியாதையைத் தீர்மானிக்கும். பெண்கள் முன்னேற்றம் அடையாமல் எந்தச் சமூகமும் முன்னேறாது என்பதைத் திராவிட இயக்கம், நூற்றாண்டுக்கு முன்பே புரிந்துகொண்டது. அந்தச் சிந்தனையைச் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்றைக்கு இந்தியா முழுவதும் பத்து மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே போல இல்லத்தரசி 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களை நகலெடுத்து தேர்தல் அறிக்கை என பித்தலாட்டம் செய்து வரும் எதிரிகளையும் உதிரிகளையும் ‘இல்லத்தரசி திட்டம்’  க்ளீன் போல்டு செய்து தேர்தல் களத்தில் இருந்தே விரட்ட போகிறது. நலத்திட்டப் பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, விநியோகிப்பதுதான் இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை. ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக நலத்திட்டப் பொருளைப் பயனாளிகளே நேரடியாக முடிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தது திமுக மட்டும்தான்! மே 4-ஆம் தேதி 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக கூட்டணி வென்றது என்ற செய்தியை கேட்க ஆவலாக இருக்கிறார்கள் பெண்களும் அவரது குடும்பத்தினரும் மற்றும் வணிகர்களும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.