மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?- அமைச்சர் விளக்கம்
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் இ.சேவை மையத்தில் சென்று மேல் முறையீடு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “மகளிர் உரிமையை கேட்டு கேட்டு பெறக்கூடிய நாளாக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை வீட்டில் முடக்கி வைக்கக் கூடாது. நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை. எங்கும் கொடுக்காத போது தமிழகத்தில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உள்ளது என்று உரிமையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார். வேலைவாய்ப்பில், கல்லூரி படிப்பில் அனைத்திலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அலங்காரத்திற்கு, நகைக்கு அடிமை ஆகக்கூடாது என்ற முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நமது உரிமையை பெற வேண்டும். குடும்பத்தின் நங்கூரமாக இருக்கக்கூடிய
பெண்கள் தங்கள் உடலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த வயது பெண்ணாக இருந்தாலும் சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். பெண்கள் நமக்கு நாமே உற்சாகத்தை வழங்கிக் கொள்ள வேண்டும். பெண்கள் உறவுகளை அனைத்து செல்ல வேண்டும். கண்டிப்பாக உறவுகள் வேண்டும் என்பதை பெண்கள் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மூத்தவர்களை பாதுகாக்க வேண்டும். குழந்தை வளர்ப்பும் முக்கியம் அதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த பெண் சமுதாயம் முன்னேற வேண்டும். பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும், எத்தனை சொத்து இருந்தாலும் கல்வி நம்மை விட்டு போகாது, அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் சிறந்த கல்வியாளர்களாக வரவேண்டும். ஒரு பெண்ணுக்கு ஒரு உதவி தொகை தான் கிடைக்கும். எனவே மகளிர் உரிமைத் தலைவர் கிடைக்காதவர்கள் இ.சேவை மையத்தில் சென்று மேல் முறையீடு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும். மேலும் அதிகமானோருக்கு வழங்கப்படும். பெண்கள் தங்கள் உதவிக்காக 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெண் சமுதாயம் முன்னேறினால் தமிழ் சமுதாயம் முன்னேறும் என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்” எனக் கூறினார்.