×

"தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள்..." - துரைமுருகன் உறுதி; அரசு க்ரீன் சிக்னல்!

 

வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கொரோனா போல வேகமாக உள்ளது. தாறுமாறாக பேருந்து நிலையத்தைக் கட்டி வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். நுழைவு வாயில் அருகே எந்தவிதமான தடைகளும் கட்டக்கூடாது. நவீனமாக கட்டி முடிக்கப்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில் பேருந்து நிலையத்தில் அடிக்கடி ஆய்வு செய்வேன். இதில் முறைகேடு நடப்பது தெரிய வந்தால் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் கிரீன் சர்க்கில் இருக்கும் வரை அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாது. அப்பகுதியில் பகுதியில் உணவகங்கள் முன்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மணல் குவாரி திறக்கப்படுவது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும். எந்த பகுதியிலும் அனுமதியில்லாமல் தற்போது கல்குவாரிகள் இயங்கவில்லை. 

மேலும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மேம்பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காங்கேயநல்லூர் இடையே பாலாற்றில் பாலம் அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் பாலம் அமைத்தால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்” என்றார். மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் துவங்கி உள்ளதாகவும் மணல் குவாரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.