அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க தயக்கமா?- அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் எந்தளவிற்கு பாதுகாப்பின்றி அச்சத்துடன் வாழ்ந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, கள்ளக்குறிச்சி மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், "கள்ளக்குறிச்சி எம். எல். ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் எப்படி அச்சத்துடன் இருந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும்" என்றார்.