×

5,000 மெடிக்கல்கள் நாளை செயல்படும்- அமைச்சர் அருண்ராஜ்

 

நீட் வேண்டாம் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு, நீட் கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், “மருந்து விற்பனையாளர்கள் நாளை கடையடைப்பு அறிவித்த நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 50,000 மருந்தகங்கள் உள்ளன, நாளை ஸ்டிரைக்கின் போது 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும். மருத்துவமனைகளில் இயங்கும் மருந்தகங்கள் மூடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாாிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் இயங்கும் மருந்தகங்களில் நாளை வெளிமருந்து சீட்டிற்கும் மருந்துகள் வழங்கப்படும். அந்தந்த பகுதி மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாாிகள் மருந்துகள் கிடைக்காத புகாா்களை பெற்று நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய மெடிக்கல் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. தமிழ்நாட்டில் அவசர கால மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். நாளை முதல் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளோம். நீட் வேண்டாம் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு, நீட் கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது. அவசரமாக தேவைப்படும் மருந்து பொருட்களை பெற்றுக் கொள்ள மாவட்டத்திற்கு 2 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலைநிறுத்த நாளிலும் பொதுமக்களுக்கு தேவையான மருந்து தேவையை அரசு நிச்சயமாக பூர்த்தி செய்யும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மருந்துகள் தாராளமாக கிடைக்கும். ஆன்லைனில் போதைப்பொருட்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.