அவதூறு சேற்றை வாரி இறைத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்கும் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை- அருண்ராஜ்
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில், தோல்வி பயத்தால் தத்தளிக்கும் திமுக நிர்வாகி திரு. செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது வீசியுள்ள அபாண்டமான அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறோம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில், “ஊழல் இருளில் உழல்வோர், ஒளியைப் பழிப்பதா? தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில், தோல்வி பயத்தால் தத்தளிக்கும் திமுக நிர்வாகி திரு. செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது வீசியுள்ள அபாண்டமான அவதூறுகளை வன்மையாக கண்டிக்கிறோம். நிராகரிக்கிறோம். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. புனையப்பட்டது. இடைத்தேர்தல் வரலாற்றிலேயே ஜனநாயகத்தைப் பணச்சலங்கையிட்டு ஆடவிட்ட பெருமை திமுகவையே சாரும். வாக்காளர்களை ஆட்டு மந்தைகளாக மண்டபப் 'பட்டிக்குள் அடைத்து' வாக்கு வேட்டையாடிய பிதாமகர்கள், இன்று எங்களைப் பார்த்துத் 'தூய அரசியல்' என கூறியதை விமர்சித்து பேசுவது விந்தையிலும் விந்தை!
சேலை, விளக்கு, பிரியாணி எனத் தாங்கள் காலங்காலமாகச் செய்யும் தகிடுதத்தங்களை எங்கள் மீது திணிப்பது, இருள் ஒளியைப் பார்த்துப் பழிப்பதற்குச் சமம். அதிகார பலத்தாலும் பண மமதையாலும் வாக்குகளை விலைக்கு வாங்கிப் பழகியவர்களுக்கு, எங்கள் மீது மக்கள் காட்டும் தன்னெழுச்சியான அன்பு கண்களை உறுத்துகிறது. அவர்கள் காட்டும் புகைப்படம், வஞ்சகத்தால் புனையப்பட்ட அப்பட்டமான பொய்! காசை வீசி வாக்குகளைப் பறிக்கும் கறைபடிந்த அரசியல் எங்கள் மரபல்ல; அறமே வடிவான எங்கள் தலைவரின் அகராதியிலேயே அதற்கு இடமில்லை. எளிய மக்களின் தூய அன்பை மட்டுமே நம்பி நிற்கும் எங்களுக்கு, ஊழல் குறுக்கு வழிகளில் பயணிக்கும் இயல்பே எக்காலத்திலும் கிடையாது! அவதூறு சேற்றை வாரி இறைத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்கும் திரு. செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினர் மீது, த.வெ.க உறுதியான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பணத்தால் ஜனநாயகத்தை ஏலம் கேட்கும் எத்தர்களுக்கு, தாராபுரம் மக்கள் தங்கள் விரல் மையால் தகுந்த தீர்ப்பெழுதுவார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.