“இந்த காருல போன வெற்றி நிச்சயம்”- சென்டிமெண்ட் காரில் வந்து 7வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர்
37 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை வாங்கிய ராசியான அம்பாசிடர் காரில் ஏழாவது முறையாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் தந்தை எம் ஆர் கிருஷ்ணமூர்த்தி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக இருக்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஏழாவது முறையாக குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். ஒரு முறை தோல்வியை தழுவிய அவர் மற்ற அனைத்து முறையையும் வெற்றி கண்டுள்ளார். தனது தந்தை 1989 ஆம் ஆண்டு வாங்கிய அம்பாசிடர் காரில் வந்து தான் இதுவரை அனைத்து தேர்தல்களிலும் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த முறையும் அந்த காரில் வந்த அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் முட்டம் பகுதியில் அமைந்துள்ள தனது தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குறிஞ்சிப்பாடி பகுதிக்கு வந்த அவர் தனது அம்பாசிடர் காரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை அழைத்துச் சென்று குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த காரில் வந்து நாம் வேட்பு மனு தாக்கல் செய்து குறித்து அவரிடம் கேட்டபோது பழமையை மறக்காதவர்கள் நாங்கள் புதுசு கிடைத்தால் பழையதை மறந்து விடுவார்கள். எங்களது கூட்டணியே பழைய கூட்டணி தான் அதேபோல தான் இந்த காரும் தான் தந்தையின் நினைவாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்