×

அனைத்து வகுப்பறைகளிலும் 1098 மற்றும் 14417 என்ற எண் ஒட்டப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்
 

 

குழந்தைகளுக்கான உதவி எண்கள் 1098 மற்றும் 14417 ஆகியவை குறித்த ஸ்டிக்கர்கள்  அனைத்து வகுப்பறைகளிலும்  ஒட்டப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 54வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ், நூலகர்களுக்கான நல் நூலகர் விருதை வழங்கினார்.  

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதற்கான பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர கூறப்பட்டுள்ளது. தற்போதைய வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் சுழற்சி முறை வகுப்புகளை நிறுத்த முடியாது. கொரோனா  தொற்று முழுமையாக குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்

குழந்தைகளுக்கான உதவி எண்கள் 1098 மற்றும் 14417 ஆகியவை குறித்த ஸ்டிக்கர்கள் அனைத்து வகுப்பறைகளிலும்  ஒட்டப்படும். தனியார் பள்ளிகள் கொரோனா காலத்தில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டாம். இதை தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை வேண்டுகோளாக வைக்கிறேன், கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்த்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் தங்களின் சமூகப் பொறுப்பாக உணர்ந்து வசூலிக்க வேண்டும். பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த ஆண்டுகளைப் போலவே வினாத்தாள் வடிவமைப்பு இருக்கும். பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு போலவே மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும்” என தெரிவித்தார்.