×

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்- அன்பில் மகேஷ்

 

தமிழகத்தில் விரைவில் இரண்டாம் நிலை ஆசிரியர் பணிகளுக்கான 2,340 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள். பின்னர் 2014-ம் ஆண்டு சம்பள உயர்வு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-ம் ஆண்டு சம்பள உயர்வு 700 ரூபாய் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சம்பள உயர்வு 2 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்பட்டது. கடைசியாக 2024-ம் ஆண்டு 2500 ரூபாய் உயர்த்தியதால் 12,500 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம் எதுவுமே கிடையாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 2025-ம் ஆண்டு கணக்குப்படி சுமார் 12 ஆயிரம் பேர் பணி செய்து வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாதது பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பகுதிநேர ஆசிரியர்கள் 8 நாட்களாக போராடி வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார்.