டெல்லி மாணவர்களுக்கு தவெக துணை நிற்கும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி..!
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், விளையாட்டு விடுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதாவ் அர்ஜுனா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "விளையாட்டுத் துறை வாயிலாக மாணவர்களை போதைப்பாதையில் இருந்து மீட்க வேண்டிய தேவை தற்போது அவசியமானதாக உள்ளது.
தமிழகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வந்தாலும், சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம் கூட வாங்க முடிவில்லை. இதற்கு நமது விளையாட்டு பயிற்சி முறைகள் 30 ஆண்டுகள் பின்தங்கி இருப்பதே முக்கிய காரணம்.
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தேடிக் கண்டுபிடித்து வெளிக் கொண்டுவந்தது போல, தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் மறைந்திருக்கும் விளையாட்டு விதைகளை நாம் தேடிச் சென்று கண்டறிய வேண்டும்.
தமிழகத்தை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களை ஒருங்கிணைத்து பேச வேண்டும். பொதுவாக உடற்கல்வி வகுப்பு என்று சொன்னாலே வகுப்பில் உள்ள 100 மாணவர்களில் 99 பேர் உற்சாகமாக எழுந்து நிற்பார்கள். எனவே நாள்தோறும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும். மாணவர்களை நன்றாக விளையாட வைத்தால், அவர்களின் கல்வி திறனும் தானாகவே சிறந்து விளங்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், ஏழை மாணவர்களின் நலனுக்காகவும் எங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும். டெல்லியில் உள்ள மாணவர்கள் இன்றைக்கு நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக எழுப்பும் குரலுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். தங்கை அனிதாவை இழந்து தவிக்கும் எண்ணற்ற சகோதரர்களின் துயரம் தீர நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நீட் பயிற்சி மையங்களில் சேர முடியாது என்பதே நிதர்சனம். மத்திய அரசின் இந்த தவறான கொள்கைக்கு எதிராக மாணவர்களின் குரலாக நின்று பாராளுமன்றத்தில் நீட் தேர்வு திரும்பப் பெறப்படும் வரை நமது மாநில முதல்வரின் குரல் இந்தியாவிலேயே முதன்மையான உரத்த குரலாக எதிரொலிக்கும்" என்றார்.