×

1,0000,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர்..!

 

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பை சுட்டிக்காட்டி, '258 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, த.வெ.க., அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலாமாகி உள்ளது' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவு லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்தது. இந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "கற்பனையான குற்றச்சாட்டுக்களை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஜான் பிரிட்டோவுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவைத் தொடர்புப்படுத்தி தவறான தகவலை வெளியிட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட ஜான் பிரிட்டோவுடன் அமைச்சருக்கு எந்த தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறுப் பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக அமைச்சரின் உறவினரான ஜான் பிரிட்டோவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சூரிய பிரகாசம், "அமைச்சர் குறித்து தவறாக கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், அதே சமூக வலைதளத்தில் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 1 கோடி இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும். அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடரப்படும்" எனத் தெரிவித்தார்.