"திமுகவின் ஆபாச நடவடிக்கைளால் மக்களின் மனதில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும்"- ஆதவ் அர்ஜுனா
கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன.
அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் கலங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர் , தமிழ்நாட்டு மக்களால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார். அதை மேடையில் இருக்கும் சென்னை மாநகர மேயர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர் பிரியா அவர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள திருமதி.கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் தலைகுனிந்து மௌனமாக இருக்கிறார். அவர் அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காதது ஒருபுறம் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், உடனடியாக, சட்டப்படியான முறைகளில், தி.மு.க-வின் இதுபோன்ற அநாகரீக செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும். அதனால், தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வெறும் வார்த்தைகளில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது "அவரே இதுபோன்ற கொச்சையான பேச்சுக்களை கேட்டு ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற அவதூறுகளால், ஆபாசப் பேச்சுக்களால் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி மறைத்துவிட முடியாது. ஆனால், தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி!
ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.