"நூலக ஊழல் வெளியானது முதல் எங்கு ஸ்டாலின் பதுங்கி இருக்கிறார்"- ஆதவ் அர்ஜூனா
ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு தவெக அரசை விமர்சித்து வந்த ஸ்டாலின், நூலக ஊழல் வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், "ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு தவெக அரசை விமர்சித்து வந்த ஸ்டாலின், நூலக ஊழல் வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார். இப்போது வெளியிட வேண்டியதுதானே ஒரு அறிக்கையை? கழிவறையிலிருந்து கல்லறை வரை ஊழல் செய்தவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள். பிக்பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடனை யாராவது கண்டுபிடித்து 'திருடன்... திருடன்' என்று சத்தம் போட்டால் அவன் கூட்டத்தில் இன்னொருவனிடம் பர்ஸை மாற்றிவிட்டு இவனும் கூட்டத்தோடு சேர்ந்து திருடன்.. திருடன் என்று கத்துவான். திமுக போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது.
அண்ணா, பெரியார் பெயரை மட்டும் தன் ஆட்சிக்கு முகமூடியாக போட்டுக்கொண்டு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செய்ததெல்லாம் ஊழல்.. ஊழல்.. ஊழல் மட்டும்தான். இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம். நேற்றைய தலைமுறையின் அறிவுஜீவிகளை ஏமாற்றி, இன்றைய தலைமுறையின் மூளையை மழுங்கடித்து வரவிருக்கும் நாளைய தலைமுறை அறிவுஜீவிகளின் எதிர்காலத்தை சூனியத்தில் தள்ளும் படுபாதகத்தைச் செய்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அரசு. தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின். டிஜிட்டல் ஊழல், ஏஐ ஊழல் எனக் காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது திமுக. இதுதான் ஸ்டாலினின் ஒரே சாதனை. தமிழ்நாட்டைப் பிடித்த தீராத வேதனை" எனக் கூறியுள்ளார்.