"பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரியல் எஸ்டேட்க்காக தான் உருவாக்கப்பட்டது"- ஆதவ் அர்ஜூனா பரபரப்பு
ஊழல் சாம்ராஜ்யத்துக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள், அண்ணா பிறந்த காஞ்சியில் திமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “திருவண்ணாமலை இனி யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்காது. திருவண்ணாமலைக்கு தேவையான வளர்ச்சியை நாங்கள் தருவோம். பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்த போது, நான் முதலில் சென்றது மேல்மா. எங்களின் முதல் கொள்கை, விவசாயிகளும், விவசாய கொள்கைகளும் தான். மலைகள், சுரங்கங்களில் பினாமிகள் மூலம் கனிமங்களை எடுத்தவர்கள் மீது முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார். ஆதாரம் இருக்கிறதா என்றால், 30 ஆண்டுகளுக்கு முன் சைக்கிளில் வந்து, இன்று இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரி இருக்கிறதோ, அவர்கள் தான் ஆதாரம். அவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள். அண்ணா பிறந்த ஊரில் திமுக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. ஊழல் சாம்ராஜ்யத்துக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள், அண்ணா பிறந்த காஞ்சியில் திமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. நாங்கள் ஒரு சுரங்கத்தையும் தொடமாட்டோம், மணலையும் தொட மாட்டோம். எல்லா சொத்துக்களையும் மக்களிடம் சேர்ப்பது அமைச்சரின் பொறுப்பு என்று முதல்வர் கூறியுள்ளார்.
தவெகவில் இருப்பவர்கள் யாரும் சுரங்கத் தொழிலோ, மணல் தொழிலோ செய்வதில்லை, இனியும் செய்யப் போவதில்லை. இதை உறுதியாகச் சொல்கிறோம். பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரியல் எஸ்டேட்க்காக தான் உருவாக்கப்பட்டது. திட்ட அறிக்கை வெளியான போதே குறிப்பிட்ட கட்சி சார்ந்தவர்கள் அப்பகுதியில் நிலத்தை அதிகளவில் வாங்கி குவித்துவிட்டார்கள். பரந்தூர் விமான நிலையமா? இல்லை விவசாயிகள் கண்ணீரா? என்றால் எங்கள் தலைவர் விஜய் விவசாயிகள் கண்ணீர் பக்கம்தான் நிற்பார். 5 ஆண்டுகள் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் ரெடி. உங்களை விட 10மடங்கு பொருளாதாரம் வளர்ந்திருக்கும். ஊழல் இல்லாத ஆட்சியை எங்கள் முதல்வர் தருவார்” என்றார்.