திருவண்ணாமலையில் மினி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்..!!
திருவண்ணாமலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போளூர் சாலையில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் மூடுவிழா செய்யப்பட்டு திண்டிவனம் சாலையில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்தது.
பழைய பேருந்து நிலையம் புழக்கத்தில் இருந்தபோது அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. இப்போது புதிய பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால் பக்தர்களுக்கு எந்த வழியாக செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் வசதிக்காகவும், பக்தர்களின் வசதிக்காகவும் மினி பேருந்து சேவை போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆட்டோ ஓட்டுனர்கள் மினி பேருந்து இயக்கம் காரணமாக தங்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மினி பேருந்து போக்குவரத்துக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அனுமதி அளித்து பர்மிட் வழங்கியது. நகரில் சுமார் 40க்கும் அதிகமான மினி பேருந்து இயங்கி வருகிறது. இவர்கள் நகரில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதற்கு கட்டணமாக ரூ. 10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் மினி பேருந்துகளுக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்தது.
இது ஆட்டோ ஓட்டுனர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் அடிக்கடி மினி பேருந்து டிரைவர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து மினி பேருந்துகளையும் அங்கிருந்து வெளியே செல்லும் படியும், இல்லாவிட்டால் பேருந்து கண்ணாடிகளை அடித்து உடைத்து விடுவோம் என்று சில ஆட்டோ டிரைவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல்கள் தொடர்ந்ததால் மினி பேருந்துகளை இயக்க மாட்டோம் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று அனைத்து மினி பேருந்து டிரைவர்களும் பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.
நாளுக்கு நாள் ஆட்டோ டிரைவர்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டது எனவும், பேருந்து நிலையத்திற்குள் நாங்கள் வர கூடாது, பயணிகளை ஏற்றக் கூடாது, மீறினால் பேருந்துகளை உடைப்போம் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் மிரட்டுகிறார்கள் என்றும், பயணிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் கூறினர்
மல்லவாடி, அருணை கல்லூரி, அரசு கல்லூரி, கிரிவலபாதை, எஸ்கேபி கல்லூரி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளை இயக்குகிறோம். அரசு கல்லூரியில் பேருந்தை நிறுத்தினாலும் மிரட்டுகிறார்கள். புது பேருந்து நிலையத்தில் மாலை 6 மணிக்கு மேல் மினி பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர கூடாது என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு முடிவு கிடைக்கும் வரை நாங்கள் பெருத்துகளை இயக்க மாட்டோம் என்று மினி பேருந்து ஓட்டுநர்கள் குற்றம் சாட்டினர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என மினி பஸ் ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், அரசு விடுமுறை தினம் என்பதால், நேற்று பேச்சு வார்த்தை நடத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர், இது தொடர்பாக இன்று காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர், மினி பஸ் ஊழியர்கள் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பேருந்துகளை எடுத்துச் சென்றனர். ஆனாலும், தீர்வு காணும் வரை மினி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்திருந்தனர், இந்த திடீர் போராட்டத்தால் மினி பேருந்துகளை நம்பியிருந்த பொதுமக்கள் பெரிதும் அவதிபட்டனர். கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சார்பாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து இலவசமாக பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு இயக்கப்படும் பேருந்துகளை கூடுதலாக ஏற்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.